’காடழித்து மரம் வளர்ப்போம்’ என்ற இக்கட்டுரைத் தொகுப்பு பல்வேறு சந்தர்ப்பங்களில், பல்வேறு இதழ்களில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாக அமைந்துள்ளது. இது என்னுடைய முதல் கட்டுரைத் தொகுப்பு நூலாக வெளிவருகிறது. சூழலியல் எழுத்துக்களை தொடங்கிய ஆரம்பக் கால எழுத்துக்களில் இருந்து சமீப காலம் வரை எழுதிய கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.
மரங்களை அமைதிக்கான தீர்வாக முன்வைத்த கென்ய பெண்மணி வங்காரி மாத்தை, இந்திய பறவையியல் அறிஞர் முனைவர் சாலிம் அலி மற்றும் பரிணாமக் கோட்பாட்டை அளித்த சார்லஸ் டார்வினின் புகழ்பெற்ற பீகிள் கடற்பயணம், வாழ்க்கைக் கதை என இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. இந்திய கல்விப் புலத்தில் மறைக்கப்பட்ட ‘மக்கள் அறிவியலாளரான மேக்நாட் சாகா’ குறித்த நூல் மதிப்புரை, சர்வதேச அளவில் புகழ்பெற்ற தமிழகக் காட்டுயிர் ஒளிப்படக்கலைஞரான ராதிகா ராமசாமி, இந்திய வண்ணத்துப்பூச்சி மனிதனாக அறியப்படும் ஐசக் கெகிம்கர் என ஆளுமைகளின் கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.
பூச்சிகள் பற்றிய அறிமுகக் கட்டுரை, வேட்டையாடிப் பூச்சிகள் குறித்த கட்டுரையோடு பூச்சிக்கொல்லிகளின் பாதிப்பை உலகிற்கு எடுத்துக்காட்டிய ரேச்சல் கார்சன் குறித்த கட்டுரை இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சென்னை கடற்கரையில் நடந்த கப்பல் விபத்து குறித்த கட்டுரைகள் வெவ்வேறு சமயங்களில் எழுதியவை. குறிப்பாக, கடலில் எண்ணெய் கொட்டிய கப்பல் விபத்தை நேரில் பார்த்த சந்தர்ப்பம் கடும் மனவேதனையை ஏற்படுத்தியிருந்தது. வேடந்தாங்கல் பறவைகள் காப்பிடம் செல்லும் வழிகளில் நடைபெற்று வரும் மனை விற்பனை, சூழல் சுற்றுலாவால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை இக்கட்டுரை பேசுகிறது. 2019-ஆம் ஆண்டு மார்ச் மாதம் கடைசியில் இறந்த வெள்ளை ஆண் காண்டாமிருகம் குறித்த கட்டுரை, நீர்ப்பறவைகள், கரையோரப் பறவைகள் பற்றிய கட்டுரைகளும் இதில் இடம்பெற்றுள்ளது. உயிரினங்களின் அழிவு என்பது மனிதர்கள் வாழத் தகுதியற்ற நிலமாக இப்புவி மாறுகிறது என்பதையே உணர்த்துகிறது. உயிரினங்களின் உருமறைத்தோற்றமும், கண்களும் உயிரினங்களின் செயல்பாட்டிற்கு எந்தளவிற்கு முக்கியத்துவமாக இருக்கிறது என்பதை இவ்விரு கட்டுரைகள் பேசுகின்றது.
Reviews
There are no reviews yet.