தமிழ் அறிவு மரபில் தெய்வம் இறை கடவுள் நூல் பற்றி
வழக்கம்போல் எல்லாமே மேற்கில் இருந்தும் வடக்கில் இருந்தும் வந்தன என்ற சொல்லாடல்கள் நிகழ்ந்து வரும் சூழலில்…
இந்நூல் புதிய பார்வையை தமிழ்ச் சமய வரலாற்றில் கூர்மையாக்குகிறது.
தமிழ்ச் சமூகத்திற்கு என்று தனித்துவத்துடன் வளர்ந்த சமய வரலாறு அதன் நுட்பமான ஆன்மிகம் எனப்படும் கடவுண்மை (Spirituality) பற்றிய தேடலை விளக்குகிறது இந்நூல்.
“இந்திய மெய்யியல்” என்று நீங்கள் இணையத்தில் தேடினாலும் (Britannica உட்பட) , நூல்களில் தேடினாலும் தமிழின் சூரர வழிபாடு பற்றியோ, ஆரணங்கு பற்றியோ, தேவார/பாசுரங்களின் சாரம் பற்றியோ, சித்தர்களின் சிந்தனைகள் பற்றியோ கண்டறிய முடியாது.
இப்படி ஒதுக்கப்பட்ட தமிழ் அறிவு மரபின் உள்ள கடவுண்மை (ஆன்மிக) பற்றிய உண்மைகளைப் பேசும் நூலாக இஃது உருவாகியுள்ளது.
தமிழ் அறிவு மரபில் தெய்வம், இறை, கடவுள் என்ற சொற்கள் எவ்வாறு உருவாயின?
அவற்றின் பொருள் காலப்போக்கில் எவ்வாறு மாறியது?
இயற்கையோடு இணைந்திருந்த தமிழரின் தொடக்ககால வாழ்விலிருந்து அரசு, வரி, வேளாண் மீத்தம் (உபரி), கோயில் நிறுவனம், சித்தர் மரபு என நகர்ந்த சமூக மாற்றங்கள், கடவுள் பற்றிய தமிழரின் சிந்தனையை எவ்வாறு மாற்றியமைத்தன?
இந்தக் கேள்விகளின் வழியாகத் தமிழ் அறிவு மரபின் ஒரு நீண்ட சிந்தனைப் பயணத்தை இந்நூல் ஆராய்கிறது.
சங்ககாலத் திணை வாழ்வில் இயற்கை, நிலம், பொழுது, உணவு, தொழில், உயிரினங்கள், மனித உறவுகள் ஆகியவை ஒன்றுக்கொன்று பிரிக்க முடியாத உறவுகளாக இருந்தன.
அந்த வாழ்வியல் உலகிலிருந்து வேளாண் விளைவிப்பு பெருகி, மீத்தம் (உபரி), பகிர்வு, வரி, அரசு போன்ற புதிய சமூக உறவுகள் உருவானபோது, சமய நிறுவனங்களும் புதிய வடிவங்களைப் பெற்றன.
அரசின் வருவாய் கோயில்களுக்குச் சென்றபோது, கோயில் வெறும் வழிபாட்டிடமாக இல்லாமல் நிலம், பொருள், உழைப்பு, கல்வி, கலை, ஆளுமை (நிர்வாகம்) ஆகியவற்றை ஒருங்கிணைத்த பெரும் நிறுவனமாக வளர்ந்த வரலாறும் இந்நூலில் ஆராயப்படுகிறது.
அதன் பின்னர் சித்தர் மரபில் நிகழ்ந்த ஒரு முதன்மையான மெய்யியல் திருப்பம் கவனிக்கப்படுகிறது.
வெளியில் தேடப்பட்ட கடவுள், உடலுக்குள்ளும் உள்ளத்துக்குள்ளும் உயிரின் உணர்வுக்குள்ளும் தேடப்பட வேண்டிய மெய்யாக மாற்றமாகிறது.
“உள்ளம் பெருங்கோயில்” என்ற சிந்தனை, கடவுளை ஒரு வெளிப்புற அதிகாரத்திலிருந்து அக மெய்ப்பாடாகவும், உயிர்களிடையேயான அன்பாகவும் விரிவுபடுகிறது.
இந்த வரலாற்றுப் பயணத்தைத் தொடர்ந்து, மனிதனையும் இயற்கையையும் பிரித்துப் பார்க்காமல், உறவு, பன்மயம், பாங்கமைவு, இசைவோட்டம், இயைவு ஆகியவற்றின் வழியாக வரலாற்றைப் புரிந்துகொள்ளும் ஒரு புதிய சிந்தனைப் பாதையையும் இந்நூல் முன்வைக்கிறது.
இந்நூல் மதத்தைப் பற்றிய ஒரு விளக்கம் மட்டுமல்ல.
இது இயற்கை → மனிதன் → விளைவிப்பு (உற்பத்தி) → மீத்தம் → அரசு → கோயில் → அகமெய்யுணர்வு → உயிர்மநேயம் என விரியும் தமிழ் அறிவு மரபின் மாற்றங்களைத் தேடும் ஒரு பயணம்.
தமிழர் சிந்தனை மரபை அதன் சொற்களின் வரலாற்றோடும், சமூக மாற்றங்களோடும், இயற்கை உறவுகளோடும் இணைத்து வாசிக்க விரும்புவோருக்கு இந்நூல் ஒரு புதிய பார்வையைத் திறக்கிறது.
“கடவுள் எங்கே?” என்ற கேள்வியிலிருந்து “மனிதன் இயற்கையோடும் பிற உயிர்களோடும் எந்த உறவில் வாழ்கிறான்?” என்ற கேள்விக்குள் செல்லும் பயணமே இந்நூலின் மையம்.




Reviews
There are no reviews yet.