புள்ளினத்தை அவதானிப்பது, காட்டுயிரைப்பற்றி படிப்பது இவை நாம் வாழும் உலகைப் பற்றி ஒரு அடிப்படையான புரிதலுக்கு இட்டுச் செல்லும். இந்த புரிதல் நமது வாழ்வாதாரம் பற்றியது. நம்முடன் இந்த உலகில் வாழும் மற்ற உயிரினகளைப் பற்றியும், அவைகளுக்கும் நமக்கும் உள்ள பிணைப்பு பற்றியும், எப்படி எல்லா உயிரினங்களும் ஒன்றோடொன்று இணைப்பு கொண்டுள்ளன, ஒரு பெரிய சிலந்தி வலையைப் போல் என்பதை உணர்த்தக் கூடிய ஒரு கருத்தாக்கம் பாரதி பாடியது இந்த இணைப்பைப் பற்றித்தான்.
வானில் பறக்கின்ற புள்ளெலாம் நான்
மண்ணில் திரியும் விலங்கெல்லாம் நான்
கானிழல் வளரும் மரமெல்லாம் நான்
காற்றும் புனலும் கடலுமே நான்
எளிய தமிழில் சதீஸ் எழுதியிருக்கும் இந்த நூல் இத்தகைய புரிதலை நமக்கு அளிக்கக் கூடியது.
இயற்கையிலிருக்கும் இந்தப் பிணைப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டால் சூழலியல் சீர்கேட்டிற்கும், வறுமைக்கும் உள்ள தொடர்பு நம் வாழ்வின் அன்றாட வளத்திற்கும் பல்லுயிரியத்திற்கும் உள்ள பிணைப்பு ஆகியவற்றை சமூக நீதி பற்றிய அக்கறையும் பின்னிப் பிணைத்துள்ளன என்பதையும் சுற்றுச்சூழல் சீரழிவால் முதல் அடி வாங்குவது ஏழை மக்கள்தான் என்பதையும் அவர்கள் உணர்வார்கள்.
பறவைகள் பாலூட்டிகள் இவற்றின் இயற்கை வரலாறு பற்றி சதீஸ் எழுதுகின்றார் இயற்கையுடனும், மற்ற உயிரினங்களுடனும் நமக்கு இருக்கும் மரபுப் பூர்வமான பிணைப்பைப் பற்றி இந்த கட்டுரைகள் விளக்குகின்றன அதிலும் பறவையை கவனித்தல் தமிழ் மக்களிடையே வேகமாகப் பரவி வரும் இந்த சமயத்தில் வரவேற்க வேண்டிய நூல். இயற்கைச் சூழலுடன் நெருங்கி வாழ்ந்திருந்த நாம் அண்மையில்தான் வேறு சூழலுக்கு மாறியிருக்கிறோம் நகரங்களில் குடியேறி அங்குமிங்கும் பாராமல் துரித கதியில் இயங்கும் போது இப்பிணைப்பு துண்டிக்கப்படுகின்றது. இயற்கையினின்று நாம் அந்நியப்பட்டு போகின்றோம் நம்மைச் சுற்றியுள்ள புறவுலகை அதிலுள்ள உயிரினங்களை நாம் கண்டுகொள்வதில்லை. நம் வீட்டு பூந்தொட்டிக்கு வரும் வண்ணத்துப்பூச்சி, மரத்தில் வந்தமரும் கரிச்சான் குருவி, நீலவானம், விண்மீன்கள், மேகக்கூட்டம் எதையும் நாம் பார்ப்பதில்லை. இன்று பவுர்ணமி என்பதை நாட்காட்டியைப் பார்த்துதான் தெரிந்து கொள்கிறோம். பெருநகர வாழ்வில் அந்தஸ்து, அதன் அடையாளங்கள், பொருள், புகழ் என்று அலையும் நமக்கு இவை தெரிவதில்லை.
பழனி மலைத்தொடர் பற்றிய கட்டுரை என்னை ஈர்த்தது. நாட்டின் சுற்றுச்சூழல் சீராக இருக்க 33 விழுக்காடு காடு இருக்க வேண்டும். நம் நாட்டில் 11 சதவிகிதம் தான் உள்ளது. விண்கோள்கள் இதை விட குறைவாகதான் காடுகள் இருக்கின்றன என்று காட்டுகின்றன. மேற்கு தொடர்ச்சி மலைகளில் பல இடங்களில் பல்லூழி காலமாக அழியாமல் இருந்த மழைக்காடுகள் அழிக்கப்பட்டுவிட்டன. தென்னிந்தியாவில் நதிகள் வறண்டு போக முக்கிய காரணம் காடுகள் அழிக்கப்பட்டதுதான். ஆனால் இன்றும் பல்லாயிரக்கணக்கான ஹெக்டர் காடுகளை மூழ்கடிக்கும் புதிய நதி அணைகளைப்பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே இந்த நூலாசிரியர் எழுதும் பருவநிலை பிறழ்வு எனும் ஆபத்துப்பற்றி நாம் எவ்விதமாக அக்கறையும் காட்டவில்லை.
ஒலி மாசு நதிகளை இணைப்பு போன்ற இன்றைய சுற்றுச்சூழல் பிரச்சனைகளை தொடுகின்றனர். இன்று நம்மை வதைக்கும் சூழலியல் கொடுமைகளுக்கு இந்த அந்நியப்படுத்துதல் ஒரு முக்கிய காரணம். ஒருவர் நல்ல மன நலத்துடன் இருக்கிறார் என்பதற்கு அடையாளம் அவர் இயற்கையுலகில் ஈடுபட்டு கொண்டிருப்பது என்று பல உளவியலாளர்கள் கூறியிருக்கின்றனர். சூரிய அஸ்தமனம், நிலவொளி,மலை, நதி, ஏரி, இவைகளில் பரவசமடைவார்கள் தங்களைச் சூழ்ந்திருக்கும் இயற்கையையும், அங்குள்ள உயிரிகளையும் பற்றிய ஒரு கரிசனம் அவர்களுக்கு இருக்கும். அதாவது இயற்கையுடன் அவர்களுக்குள்ள பிணைப்பு அறுபடாமல் இருக்கும். நகர்புறத்திற்கு குடியேறிய பிறகும் கிராமத்து சூழலை சிலர் மனம் நாடுகின்றது. நகருக்கு அருகிலேயே country clubகளை உருவாக்கி அவ்வப்போது அங்கு தப்பித்து போகிறார்கள்.
பெருவாரியான மக்கள் தமது அன்றாட வாழ்வில் உயிரற்ற செயற்கையான சாதனங்களுடனையே புழங்குகிறார்கள். இவை அழகற்றவை என்பது மட்டுமல்ல இப்பொருட்கள் நம்முள் எந்த மதிப்பையும் ஏற்படுத்தக் கூடியவையும் அல்ல அதனால் தான் மற்ற உயிரினங்களுடன், உயிரிசூழல்களுடன் வாழும் கலையை நாம் மறந்துவிட்டோம். சதீஸ் தனது எழுத்துக்களால் ஒரு விழிப்புணர்வை உருவாக்க முயற்சிக்கின்றார். இதை நாம் வரவேற்கிறேன்.
தியடோர் பாஸ்கரன்
Reviews
There are no reviews yet.