தனிமையை அனுபவிக்கும் ஆலமரம் என்ற நூலைப் பற்றி
சொற்களையும் வாக்கியங்களையும் கதைகளையும் வைத்துக் கொண்டு குழந்தைகள் விளையாடியதிலிருந்தும் உரையாடியதிலிருந்தும் உருவானவை இந்தக் கதைகள்.
சில வார்த்தைகளோ, ஒரு காட்சியோ, ஒரு ஓவியமோகூட போதுமானதாக இருக்கிறது குழந்தைகள் அர்த்தமும் உற்சாகமும் கொண்ட புதுமையான கதைகளை உருவாக்கிவிடுகிறார்கள்.
தினமும் தாங்கள் எதிர்கொள்ளும் அனுபவங்களில் இருந்தும் விருப்பங்களில் இருந்தும் நிறைய கதைகளைக் குழந்தைகள் எழுதி இருக்கிறார்கள்.
குழந்தைகளுக்கும் இயற்கைக்கும் இடையிலான நட்பை தங்கள் கதைகளின் வழியாகக் குழந்தைகள் சொல்லிவிடுகிறார்கள்.
விதை, பறவைக்கூடு இல்லாத ஆலமரம், அறுவடை முடிந்த வயல், ஆற்றங்கரை மரம், நண்டுகள், பனி படர்ந்த மலைகள், கோவிலில் பார்த்த மயில் என்று இயற்கையின் காட்சிகள் குழந்தைகளின் வழியாக தவிர்க்க இயலாமல் வெளிப்பட்டுவிடுகிறது.
வானத்திற்குக் கீழே நிலத்தைத்தன் பாதங்களால் தொட்டு உணர்ந்தபடி இயற்கையின் உற்சாகத்தையும் துயரத்தையும் அவர்களால் உணர்ந்துகொள்ள முடிகிறது.
எந்தவிதமான பயிற்சியும் இல்லாமல் கதைகளுக்காக குழந்தைகள் உருவாக்கியிருக்கும் இந்த ஓவியங்கள் அவர்கள் எப்போதும் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் ஒரு இயல்போடு இருப்பதைச் சொல்கிறது.
குழந்தைகளுக்குள் இருக்கும் மேன்மையான இலக்கியத்தை நமக்கு குறிப்பால் உணர்த்தும் வகையில் உள்ளது அவர்கள் இந்தப் புத்தகத்திற்கு வைத்துள்ள ‘தனிமையை அனுபவிக்கும் ஆலமரம்’ என்னும் தலைப்பு.
குழந்தைகள் உருவாக்கிய ஐம்பதுக்கும் மேற்பட்ட கதைகள் மற்றும் ஓவியங்களில் இருந்து அவர்களை அவர்கள் போக்கிலேயே வெளிப்படுத்தும் ஐந்து படைப்புகள் இந்தக்கதைப் புத்தகத்தில் தொகுக்கப்பட்டுள்ளன.
இந்தக் குழந்தைகளின் கலை முயற்சிகள் மேலும் வளமாகவும் வாசிக்கும் ஒவ்வொரு குழந்தைக்குள்ளும் படைப்பு குறித்த உற்சாகத்தை உருவாக்கவும் இந்த நுல் வெளியாகிறது.
Reviews
There are no reviews yet.